ஒடிசா ரெயில் விபத்து : காரக்பூரில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக காரக்பூரில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை நடத்த உள்ளார்.
புவனேஷ்வர்,
ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்து உள்ளது என்றும், விபத்துக்கான மூல காரணமும், அதற்கு காரணமானவர்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
மேலும் எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கான காரணம் எனக்கூறிய அவர், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் மற்றும் ரெயில்வே சிக்னல் அமைப்பில் முக்கிய கருவியாக இருக்கும் எலக்ட்ரிக் பாயின்ட் எந்திரத்தின் அமைப்பு மாற்றப்பட்டு இருப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதன் மூலம் மனித தவறே (நாசவேலை) விபத்தின் பின்னணியில் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ரெயில்வே அதிகாரிகள் சிலரும் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக இன்று காரக்பூரில் ரெயில்வே தென் கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உள்ளார். இன்று காரக்பூரில் தொடங்கும் விசாரணை இரண்டு நாட்களுக்கு (ஜூன் 5 மற்றும் 6 தேதி) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் ரெயில்வே நேற்று வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "ஒடிசாவில் பாலசோர் அருகே 12841 ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் & 12864 SMVT பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தடம் புரண்டது தொடர்பாக காரக்பூரில் உள்ள சவுத் இன்ஸ்டிடியூட்டில் ஜூன் 5 மற்றும் 6 தேதிகளில் தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சட்டப்பூர்வ விசாரணையை நடத்துவார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.