வாடகை கட்டணம் கொடுப்பதில் தகராறு ஒடிசா வாலிபர் குத்திக்கொலை
பெங்களூரு வாடகை கட்டணம் கொடுக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் ஒடிசா வாலிபர் குத்திக்கொன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:-
ஒடிசாவை சேர்ந்தவர்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அகமத் (வயது 28). இவரது சகோதரர் ஆயுப் (26). இவர்கள் 2 பேரும் பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அகமத் மற்றும் ஆயுப் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்கள். பின்னர் நிறுவனத்தில் இருந்து 2 பேரும் அஸ்வத் ஆட்டோவில் வீட்டுக்கு வந்தனர்.
யஷ்வந்தபுரம் ரெயில் நிலையம் அருகே மைசூர் சோப் நிறுவனம் அருகில் 2 பேரும் ஆட்டோவில் இருந்து இறங்கினார்கள். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால், வழக்கத்தை விட கூடுதலாக டிரைவர் கட்டணம் கேட்டதாக தெரிகிறது. அதாவது நள்ளிரவு என்பதால் இரட்டிப்பு வாடகை கொடுக்கும்படி ஆட்டோ டிரைவர் அஸ்வத் கேட்டுள்ளார்.
கத்தியால் குத்திக் கொலை
ஆனால் அதிக கட்டணம் கேட்பதாக கூறி பணம் கொடுக்க சகோதரர்கள் மறுத்துள்ளனர். இந்த வாடகை கட்டண விவகாரம் தொடர்பாக அகமத் மற்றும் அஸ்வத் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. அப்போது
திடீரென்று ஆத்திரமடைந்த அஸ்வத், அகமத்தை அடித்து தாக்கியதாக கூறப்படுறது. உடனே அஸ்வத்தை பிடிக்க ஆயுப் முயன்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் ஆட்டோவில் இருந்த கத்தியை எடுத்து அகமத், ஆயுப் ஆகியோர் டிரைவர் அஸ்வத் கண்மூடித்தனமாக குத்தியதாக தெரிகிறது.
இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அகமத் ரத்த வெள்ளததில் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஆயுப்பை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாடகைகட்டணம் கொடுக்கும் விவகாரத்தில் அகமத் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுப்பிரணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அ ஸ்வத்தை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.