ஒடிசாவில் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பட்நாக் ரெயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசில் தடம் புரண்டது.
புவனேஸ்வர்,
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நோக்கி சென்று கொண்டிருந்த ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பட்நாக் ரெயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசில் தடம் புரண்டது.
நேற்று மாலை 5.50 மணியளவில் லெவல் கிராஸ் அருகே வந்த போது குறுக்கே வந்த காளை மாட்டின் மீது மோதியதால் ரெயிலின் 2 சக்கரங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் என்ஜினுக்கு அடுத்த ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டது. இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரட்டை வழித்தடமாக இருந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் 7.10 மணியளவில் முடிவடைந்தன. பின்னர் தண்டவாளம் சரிபார்க்கப்பட்ட பிறகு 8.05 மணிக்கு தடம் புரண்ட ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.