டெல்லி முதல் மந்திரி வேட்பாளராக நுபுர் சர்மா நியமிக்கப்பட வாய்ப்புள்ளது - ஓவைசி


டெல்லி முதல் மந்திரி வேட்பாளராக நுபுர் சர்மா நியமிக்கப்பட வாய்ப்புள்ளது - ஓவைசி
x

Image Courtesy : PTI 

நுபுர் சர்மாவை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓவைசி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக மராட்டிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல் நவீன் ஜிந்தால் தனது டுவிட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பியது.

இதையடுத்து முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.

இந்த நிலையில் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி நுபுர் சர்மா குறித்து பேசியுள்ளார்.

நுபுர் சர்மா குறித்து ஓவைசி கூறியதாவது :

நூபுர் ஷர்மாவை பாஜக பாதுகாக்கிறது. வரும் ஆறு-ஏழு மாதங்களில் நுபுர் சர்மா பெரிய தலைவராக வருவார் என்று எனக்குத் தெரியும். டெல்லி முதல் மந்திரி வேட்பாளராக நுபுர் ஷர்மா நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

நுபுர் சர்மாவை கைது செய்து அவர் மீது இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எஐஎம்ஐஎம் சார்பாக இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story