உயிருக்கு அச்சுறுத்தல்; துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்ற நுபுர் சர்மா...!
உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மா துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளார்.
டெல்லி,
ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 26-ம் தேதி ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வன்முறை, கொலை சம்பவங்களும் அரங்கேறியது. இந்த விவகாரம் பூதாகாரமானதையடுத்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது.
அதேவேளை, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கும் உள்ளாகினர்.
இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் குறித்த கருத்து தொடர்ந்து நுபுர் சர்மாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன.
இந்நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என்று நுபுர் சர்மா டெல்லி போலீசில் கோரிக்கை மனுவைத்தார். இதனை தொடர்ந்து நுபுர் சர்மா துப்பாக்கி வைத்துக்கொள்ள டெல்லி போலீஸ் உரிமம் வழங்கியுள்ளது.