காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டி? திக்விஜய சிங் பதில்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
இதனிடையே, தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் யார்? என்பதில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.குறிப்பாக, சசிதரூர், திக் விஜயசிங், அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் ஜபல்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
"கட்சியின் தலைமை கொடுத்த அறிவுறுத்தலை நான் பின்பற்றுவேன். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அடுத்த கட்சித் தலைவராக வரமாட்டார்கள் என்று ராகுல் காந்தி தெளிவுபடுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, அரியானா காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் ஹூடா இன்று டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். ஆகவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு பூபிந்தர் ஹூடா போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய மந்திரி மணீஷ் திவாரியும் போட்டியிடுகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.எனினும்,கட்சித் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் ஆகியோர் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.