நடிகை வீட்டில் பறிமுதல் செய்த பணம் என்னுடையது இல்லை - முன்னாள் மந்திரி பார்த்தா சட்டர்ஜி
முன்னாள் மந்திரி பார்த்தா சட்டர்ஜி மருத்துவ பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடிக்கு மேற்பட்ட ரொக்கமும், இன்னொரு வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டன. ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் சிக்கின.
இதற்கிடையே, அமலாக்க துறையின் காவலில் இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி மருத்துவ பரிசோதனைக்காக கொல்கத்தா தெற்கு புறநகரில் உள்ள ஜோகாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த போது அவர் ஒரு சதியால் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்று கூறினார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு எதிராக யார் சதி செய்தாா்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், நேரம் வரும்போது எல்லாவற்றையும் தெரிந்து கொள்வார்கள் என்றார். மேலும், அர்பிதா முகர்ஜி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் உங்களுடையதா? என்ற கேள்விக்கு அது என்னுடைய பணம் இல்லை என பதிலளித்தார்.