தமிழகத்திற்கு நீரை திறந்து விடும் நிலையில் இல்லை; கைவிரித்தது கர்நாடக அரசு
தமிழகத்திற்கு நீரை திறந்து விடும் நிலையில் இல்லை என கர்நாடக அரசு கைவிரித்து விட்டது என காவிரி ஒழுங்காற்று குழு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாடு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில், வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும் கர்நாடக அணைகளில் தண்ணீர் போதுமான அளவில் இல்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று கூடியது. இதில் தமிழக அரசு சார்பில் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு, அங்குள்ள அணைகளில் உள்ள தண்ணீரின் அளவு உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த பிறகு, அடுத்த 15 நாட்கள் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு வெளியிட்டு உள்ள செய்தியில், கர்நாடகாவில் நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்தில் போதிய அளவு முன்னேற்றம் இல்லாத வரையில், நீரை திறந்து விடும் நிலையில் இல்லை என கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.
கர்நாடகாவின் காவிரி படுகை பகுதியில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. தேவையான குடிநீர் மற்றும் குறைந்தபட்ச நீர்ப்பாசன தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத வகையில், அதிகரித்து வரும் மற்றும் விரிவடைந்து வரும் இந்த வறட்சி நிலையால், பேராபத்து சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு, கர்நாடகாவில் நீர்வரத்தில் போதிய அளவு முன்னேற்றம் இல்லாத வரையில், நீரை திறந்து விடும் நிலையில் இல்லை என கர்நாடக அரசு கைவிரித்து விட்டது என காவிரி ஒழுங்காற்று குழு தெரிவித்து உள்ளது.
அடுத்த 15 நாட்களுக்கு, தினமும் வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழகம் வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், வறட்சியை சுட்டி காட்டி, தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடகா தெரிவித்து உள்ளது.