பேஷன் ஷோவின் போது இரும்பு தூண் சரிந்து விழுந்து மாடல் அழகி பலி
உத்தரபிரதேசத்தில் பேஷன் ஷோவின் போது இரும்பு தூண் சரிந்து விழுந்து மாடல் அழகி பலியானார்.
நொய்டா,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இரவு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. இதில் ஏராளமான மாடல் அழகிகள் விதவிதமான ஆடை அணிந்து 'ரேம்ப் வாக்' வந்தனர்.
24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி 'ரேம்ப் வாக்' சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு தூண் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.ஆக்ராவின் குவாலியர் சாலையைச் சேர்ந்த பாபி ராஜ் என்ற இளைஞர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வன்சிகா சோப்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மின் விளக்குகளுக்காக அந்த இரும்பு தூண் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக அந்த தூண் சரிந்து விழுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "பேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்" என்றனர்.