கழிவறையில் ரகசிய கேமராக்கள் எதுவும் வைக்கப்படவில்லை-தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேட்டி
உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கில் கழிவறையில் எந்த ரகசிய கேமராவும், வைக்கப்படவில்லை என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
மங்களூரு:-
கல்லூரி மாணவிகள் ஆபாச வீடியோ
கர்நாடக மாநிலம் உடுப்பியை அடுத்த அம்பலபாடியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் 3 பேர் கழிவறையில் செல்போன் கேமராவை வைத்து, சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த வீடியோவை கல்லூரி ஆண் நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவிற்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 3 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
அதேபோல மல்பே போலீசார் தரப்பில் விசாரணை நடத்தியதில் எந்த வீடியோ ஆதாரமும் கிைடக்கவில்லை. மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இந்தநிலையில் சமூகவலைதளத்தில் உடுப்பி மாணவிகளின் ஆபாச வீடியோ வெளியானதாக வதந்தி பரவியது. இதனை சுட்டிகாட்டி பா.ஜனதா கட்சியினர், போலீசார் மீண்டும் உடுப்பி கல்லூரி வழக்கை விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
அதன்படி நேற்று முன்தினம் மல்பே போலீசார் தாமாக முன்வந்து மாணவிகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இதுகுறித்து விசாரணை நடத்த நேற்று முன்தினம் உடுப்பி வந்தார். அப்போது அவர் உடுப்பி போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா, கலெக்டர் வித்யா குமாரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நேற்று காலை உடுப்பி பாராமெடிக்கல் கல்லூரிக்கு சென்ற குஷ்பு அங்கு ஆய்வு பணிகள் மேற்கொண்டார். குறிப்பாக கல்லூரியில் கேமரா உள்ளதா? பாதுகாப்பு எப்படி?உள்ளது. கழிவறையில் கேமரா வைத்து வீடியோ எடுக்க முடியுமா? என்பதை ஆய்வு ெசய்தார்.
மேலும் கல்லூரி சேர்ந்த இயக்குனர் ராஷ்மி, கல்லூரி முதல்வர் ராஜீப் மண்டல், ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போது, போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா, துணை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.அப்போது போலீசார் தரப்பு மற்றும் கல்லூரி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை போலீசாருக்கு கிடைத்த ஆதாரங்களையும் குஷ்பு கேட்டறிந்து பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.
கேமரா வைக்கப்படவில்லை
இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறியதாவது:-
எந்த சமுதாயத்தை சேர்ந்த மாணவிகளையும் பாதுகாக்கும் நோக்கில் நான் வரவில்லை. மாணவிகள் விவகாரம் என்பதால் தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் வந்தது. அதன்படி விசாரணை நடத்த வந்துள்ளேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதும் கல்லூரி மாணவிதான். தவறு செய்ததும் கல்லூரி மாணவிகள்தான். வளரும் பருவம். இதில் மத சாயத்தை பூச வேண்டாம். இந்த வழக்கில் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அதாவது இந்த வழக்கில் போலியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. யார் வெளியிடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக மாணவிகள் மற்றும் கல்லூரியில் 40 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கிடைத்த தகவலின் படி கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா மற்றும் செல்போன் கேமரா வைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் மாணவிகள், மாணவர்களின் செல்போன்களில் எந்த வீடியோவும், புகைப்படமும் இல்லை.
இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான தகவல்களை பெற்றுள்ளேன். அந்த தகவலை நான் வெளியிட முடியாது. இதற்கிடையில் இந்த வழக்கில் உண்மையை கண்டறிய, 3 மாணவிகளின் செல்போன்கள் தடய அறிவியல் ஆய்விற்காக பெங்களூருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. தடய அறிவியல் ஆய்வு அறிக்கை வந்த பின்னர், வீடியோ எடுக்கப்பட்டதா?, அழிக்கப்பட்டதா? என்பது குறித்த உண்மை தெரிந்துவிடும்.
அரசியல் ஆக்கவேண்டாம்
அரசியல் கட்சிகளுக்கு கருத்துகள் கூற அனைத்து சுதந்திரமும் உள்ளது. இருப்பினும் நான் அரசியல் கட்சியின் சார்பாக இங்கு வரவில்லை. உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்றுதான் வந்துள்ளேன். ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனவே முழுமையான ஆதாரங்களுக்காக காத்திருக்கிறோம். ஆதாரங்கள் கிடைத்த பின்னர் உண்மை நிலவரம் பற்றி தெரிவிக்கப்படும். அதுவரை யாரும் வதந்திகளை நம்பவேண்டாம்.
இந்த ஆபாச வீடியோ விவகாரம் குறித்து போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர். போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விசாரணை நடத்தி தேசிய மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை அளிப்பார்கள். அதன்பின்னர் தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.