நான் மண்டியா 'கவுடத்தி' என்பதை யாராலும் அழிக்க முடியாது
மண்டியா:-
கர்நாடக திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த குத்து ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா காங்கிரசில் சேர்ந்து மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். அதன் பின்னர் தேசிய அளவில் காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டார். ஆனால் திடீரென்று அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகை ரம்யாவை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் அக்கட்சி அறிவித்தது. இவர் மே 2-ந்தேதி (நேற்று) முதல் பிரசாரத்தை தொடங்குவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று நடிகை ரம்யா பிரசார களத்தில் குதித்தார். அவர் மண்டியா காங்கிரஸ் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முன்னதாக நடிகை ரம்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறுகையில், நான் எப்போதும் மண்டியாவை சேர்ந்தவள் தான். நான் கவுடத்தி தான். எனது இந்த பெயரை யாராலும் பறிக்கவோ அழிக்கவோ முடியாது.
நான் மண்டியாவுக்கு அடிக்கடி வந்து சென்ற வண்ணம் தான் இருக்கிறேன். திங்கட்கிழமை தோறும் நிமிஷாம்பா கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறேன். ஆனால் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. மண்டியா மக்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். மண்டியா மக்களின் அன்பும், உறவும் எப்போதும் என்னுடன் இருக்கும். அரசியலுக்கு மட்டும் நான் இங்கு வருவதில்லை. அனைத்து விஷயத்திலும் மக்களுடன் இருக்கிறேன்.
நான் அம்பரீஷ் அவர்கள் மறைந்த சமயத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தேன். அதாவது அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதனால் நான் வெளியே வர முடியாத நிலையில் ஓய்வில் இருந்தேன் என்றார்.
பின்னர் ரவிக்குமாரை ஆதரித்து நடிகை ரம்யா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். நடிகை ரம்யா, சித்தராமையா, டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.