கொரோனா தொற்று அதிகரித்தாலும் பீதி அடைய தேவையில்லை: நிபுணர்கள் தகவல்


கொரோனா தொற்று அதிகரித்தாலும் பீதி அடைய தேவையில்லை: நிபுணர்கள் தகவல்
x

புதிய மாறுபாடுகள் காணப்படாத நிலையில், கொரோனா தொற்று அதிகரித்தாலும் பீதி அடைய தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

புதுடெல்லி,

தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா தொற்று இந்த மாதத்தொடக்கம் முதல் கொஞ்சம் வேகம் காட்டத்தொடங்கி உள்ளது.

முன்தினம் ஒரே நாளில் 8,329 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ள முதல் 10 மாநிலங்களாக கேரளா, மிசோரம், கோவா, மராட்டியம், டெல்லி, அரியானா, சிக்கிம், சண்டிகார், கர்நாடகம், இமாசலபிரதேசம் ஆகியவை உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலங்களாக கேரளா, மராட்டியம், கர்நாடகம், டெல்லி, அரியானா, தமிழ்நாடு ஆகியவை உள்ளன.

'பீதி அடைய தேவையில்லை'

தொற்று அதிகரித்து வந்தாலும் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக அமைந்துள்ளது. இதுபற்றி அவர்கள் கூறுவதாவது:-

டாக்டர் என்.கே.அரோரா (நோய்த்தடுப்பு தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர்):- நாம் கவலைக்குரிய புதிய மாறுபாடுகளை காணவில்லை. இந்தியாவில் தற்போது பிஏ.4, பிஏ.5, பிஏ.2 மாறுபாடுகள் உள்ளன. இவை சற்றே அதிகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. நோய்த்தடுப்பு உள்ளவர்கள்தான் தற்போது அதிகளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அவர்கள் சாதாரண ஜலதோஷம், இன்புளூவன்சா போன்ற பிரச்சினைகளை மட்டுமே எதிர்கொள்கிறார்கள்.

எனவே பீதி அடைய தேவையில்லை. நாம் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அன்றாட வாழ்வில் முககவசம் ஒருங்கிணைந்த ஒன்றாகி விட வேண்டும்.

'கவலைப்பட ஏதுமில்லை'

டாக்டர் ரன்தீப் குலேரியா (டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர்):-

தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கவலைப்பட ஏதுமில்லை. ஆனால் நாம் நமது பாதுகாப்பு அம்சங்களை குறைத்துக்கொண்டுவிடக்கூடாது. தீவிர பரிசோதனைகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் புதிய மாறுபாடுகளை கண்டுபிடிப்பதைத் தவற விட வாய்ப்பு இல்லை.

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் மக்களிடையே மனநிறைவு ஏற்பட்டுள்ளது. முன்எச்சரிக்கை டோஸ்களை எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் எடுக்காமல் இருக்கிறார்கள்.

'விதிமுறைகளை பின்பற்றுங்கள்'

டாக்டர் நிவேதிதா குப்தா (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்று நோய் பிரிவு தலைவர்):-

கொரோனா இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அனைவரும் முன் எச்சரிக்கை டோஸ் உள்பட தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசிதான் தீவிர தாக்குதல், ஆஸ்பத்திரி சேர்க்கை, இறப்பு ஆகியவற்றை தடுக்கிறது.

சில மாவட்டங்களில் உள்ளூர் தொற்றால் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கட்டுப்படுத்த வேண்டிய இடங்களில் கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சிகள், கட்டுப்பாடுகள் வேண்டும். தனிமனித இடைவெளி பின்பற்றுதல், கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்வது முக்கியம் ஆகும்.

இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story