பாஜகவை தோற்கடிக்க எந்த ஒரு தனிப்பெரும் கட்சியும் தேசிய அளவில் இல்லை; தாமரை அனைத்து மாநிலங்களிலும் மலரும் - ஜே பி நட்டா
நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இல்லாத நிலை கிட்டத்தட்ட உருவாகி விட்டது என்று அவர் பேசினார்.
பாட்னா,
பீகாரில் நடைபெற்ற பா.ஜனதாவின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், பாஜகவை தோற்கடிக்க எந்த ஒரு தனிப்பெரும் கட்சியும் தேசிய அளவில் இல்லை. நம் நாட்டில் தேசிய அளவில் செயல்படும் ஒரே கட்சி பாஜக மட்டுமே.
பிராந்திய கட்சிகளான பீகாரில் லாலு பிரசாத்தின் ஆர் ஜே டி, உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சி, மராட்டியத்தில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கானாவில் டிஆர்எஸ் மற்றும் தமிழகத்தில் சில குடும்பங்கள் நடத்தும் கட்சிகள் ஆகியன ஏறத்தாழ முடிவுக்கு வந்து விட்டன. அரசியலில் அக்கட்சிகளுக்கான இடம் முடிந்து விட்டது.
நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இல்லாத நிலை கிட்டத்தட்ட உருவாகி விட்டது. பாஜக மட்டுமே அரசியலில் நிலைத்தன்மையோடு நிலையாக இருக்கும். தாமரை அனைத்து மாநிலங்களிலும் மலரும்.ஏனென்றால் இந்த ஒரு கட்சி மட்டும் தான் கொள்கைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. தாமரை அனைத்து மாநிலத்திலும் மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் பீகாரில், தற்போதைய கூட்டணியான, நிதிஷ் குமாரின் ஜனதா தள(யு) கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.