வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினர் பகுதிகளில் சி.ஏ.ஏ. அமலாக்கம் இல்லை


வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினர் பகுதிகளில் சி.ஏ.ஏ. அமலாக்கம் இல்லை
x

அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள பழங்குடியினர் பகுதிகளில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படாது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும் அந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

இந்த நிலையில், சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

அதே சமயம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள பெரும்பாலான பழங்குடியினர் பகுதிகளில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படாது.

மேலும் சட்ட விதிமுறைகளின்படி, ஐ.எல்.பி. (இன்னர் லைன் பெர்மிட்) ஆட்சி அமலில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்படாது. அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஐ.எல்.பி. நடைமுறையில் உள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து இந்த மாநிலங்களுக்குச் செல்பவர்கள், மாநில அரசின் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும்.

அதேபோல், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் தன்னாட்சி கவுன்சில்கள் உருவாக்கப்பட்ட பழங்குடியினர் பகுதிகளுக்கும் சி.ஏ.ஏ.வின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இத்தகைய தன்னாட்சி கவுன்சில்கள் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story