வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரம்.. கணவன், மாமியாரால் இளம்பெண் அடித்துக்கொலை
வரதட்சணை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சௌகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விகாஸ். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு கரிஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, விகாசுக்கு வரதட்சணையாக காரும், ரூ.21 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கூடுதல் வரதட்சணை தடும்படி கரிஷ்மாவை விகாசும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் கரிஷ்மா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
வரதட்சனை தொடர்பாக விகாசுக்கும் கரிஷ்மாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது. பின்னர் கிராம பஞ்சாயத்து மூலம் இருவருக்கும் இடையிலான பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்டது. அப்போது, விகாசின் குடும்பத்துக்கு மேலும் ரூ.10 லட்சம் ரொக்கத்தை கரிஷ்மாவின் குடும்பத்தினர் கொடுத்தனர்.
இனி தனது பிரச்சனை தீர்ந்துவிடும் என எண்ணிய கரிஷ்மாவுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. தங்களுக்கு வரதட்சணையாக மேலும் ரூ.21 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு காரை வழங்க வேண்டும் எனக்கூறி கரிஷ்மாவை விகாசின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான பிரச்சனை அதிகரித்த நிலையில், கடந்த வெள்ளியன்று விகாசும் அவரது அம்மாவும் சேர்ந்து கரிஷ்மாவை சரமாரியாக அடித்துள்ளனர்.
இதையடுத்து கரிஷ்மா, தனது சகோதரரான தீபக்கை தொடர்புகொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். உடனடியாக தீபக், கரிஷ்மாவை வந்த பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக தீபக் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், விகாசையும் அவரது தந்தையையும் கைதுசெய்தனர். மேலும், தப்பியோடிய விகாசின் தாய் மற்றும் சகோதரியை போலீசார் தேடி வருகின்றனர்.