'ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை' - காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்


ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை - காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்
x

நாடாளுமன்றத்தை திறந்து வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். நாடு சுதந்திரம் அடைந்த போது நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் எனவும், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்து இருந்தார்.

இந்த செங்கோல் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கருத்துமோதல்கள் நிலவி வருகின்றன. இது தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் புறக்கணிக்கிறது?" என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் நேருவுக்கு தமிழகத்தின் சைவ மடத்தால் வழங்கப்பட்ட செங்கோலை ஊன்றுகோலாக்கியது காங்கிரஸ் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

"அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட, சென்னையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் ஆகஸ்ட் 1947-இல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை.

ஆனால், ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரம் இந்தியாவுக்கு மாற்றப்படும் அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. மவுன்ட்பேட்டன், ராஜாஜி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் அவ்வாறு விவரித்ததாக ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது பொய்யானது.

செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக சிலர் கருதி, அது வாட்ஸ்-ஆப்பில் பகிரப்பட்டு, பின்னர் அதனை மோடி ஆதரவாளர்கள் ஊடகங்களில் முழங்கி வருகின்றனர். ராஜாஜி குறித்து நன்கு அறிந்த அறிஞர்கள் இருவர், செங்கோல் தொடர்பாக கூறப்படுவதைக் கேட்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நேருவுக்குக் கொடுக்கப்பட்ட செங்கோல் பின்னர் அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடையும்போது டிசம்பர் 14, 1947 அன்று ஜவஹர்லால் நேரு என்ன சொன்னாரோ அதுதான் அவர் சொன்னது. அதுதான் ஆதாரபூர்வமானது.

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இருக்கும் அரசியல் நோக்கங்களுக்காக பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் செங்கோல் விவகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப உண்மைகளை திரிக்கிறார்கள். புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை என்பதுதான் உண்மையான கேள்வி" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.




Next Story