துணை சபாநாயகர் இல்லாத மக்களவை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது - காங்கிரஸ் கருத்து
துணை சபாநாயகர் இல்லாத மக்களவை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவி, எதிர்க்கட்சிக்கு தரப்படுவது மரபு. ஆனால் தற்போது, அப்படி தரப்படாமல் 4 ஆண்டுகளாக துணை சபாநாயகரின்றி மக்களவை இயங்கி வருகிறது.
இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கும் தாக்கலாகி உள்ளது. இது ஒரு முக்கிய பிரச்சினை என சுப்ரீம் கோர்ட்டும் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "4 ஆண்டுகளாக மக்களவை துணை சபாநாயகர் இன்றி செயல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என சாடி உளளார்.
மேலும், "1956-ம் ஆண்டு துணை சபாநாயகர் பதவிக்கு தன்னை விமர்சித்து வந்த எதிர்க்கட்சியான அகாலிதளத்தின் எம்.பி. சர்தார் உக்கம்சிங்கை முன்மொழிந்தவர், அப்போதைய பிரதமர் நேரு. அவர் ஒருமனதாக தேர்வும் செய்யப்பட்டார்" என கடந்த கால வரலாற்றை நினைவு கூர்ந்தும் உள்ளார்.சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகள் குறித்து அரசியல் சாசனம் பிரிவு 93-ல் சொல்லப்பட்டுள்ளது.