போக்குவரத்து நெரிசலை குறைக்க பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை


போக்குவரத்து நெரிசலை குறைக்க பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை
x

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்றும் முடிவு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கு கட்டுப்படவும் தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

பெங்களூரு:-

தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை குறைக்க பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு அறிவித்திருந்தது. இதையடுத்து, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, பெற்றோர் சங்கம், தனியார் பள்ளி வாகனங்களின் டிரைவர்களுடன் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனையில் போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை பள்ளிகளின் நேரத்தை மாற்றினால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என்று கூறி இருப்பது பற்றியும், ஐகோர்ட்டு உத்தரவு குறித்தும் தனியார் பள்ளிகள், பெற்றோருடன் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விரிவாக விவாதித்தனர். ஆனால் பள்ளிகளின் நேரத்தை மாற்றுவதற்கு தனியார் பள்ளிகளும், பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேர மாற்றம் இல்லை

குறிப்பாக பள்ளிகளின் நேரத்தை மாற்றுவதால் குழந்தைகள் காலையிலேயே எழுந்திருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் பணியாற்றும் பெற்றோருக்கும் பிரச்சினை ஏற்படும், காலையிலேயே எழுந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்வதால், அவர்கள் உடல் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர் தெரிவித்தனர். அதுபோல், தனியார் பள்ளிகளும் திடீரென்று பள்ளி திறக்கும் நேரத்தை மாற்றினால், பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து விடுவதில் பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, பள்ளிகளின் நேரத்தை முன்கூட்டியே திறக்கும் முடிவை தற்காலிகமாக கைவிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டாம் என்றும், ஐகோர்ட்டு விசாரணையில் என்ன தீர்ப்பு வருகிறதோ, அதற்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம் என்றும் தனியார் பள்ளிகளும், பெற்றோரும் கூறியுள்ளனர்.

இன்று ஐகோர்ட்டில் விசாரணை

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது.

இந்த விசாரணையின் போது கர்நாடக ஐகோர்ட்டு, பள்ளிகளை திறக்கும் நேரத்தை மாற்றுவது குறித்தும், போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து எந்தமாதிரியான உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரியவில்லை.


Next Story