நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பா... மம்தா பானர்ஜியின் முடிவு என்ன?
மேற்கு வங்காள முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் டெல்லிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் கடந்த 23-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இதில், ஆந்திர பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதிஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
இந்த இரு மாநிலங்களை ஆளும் அரசுகள், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு நேரடி ஆதரவை வழங்கியுள்ளன. இதனால், அந்த மாநிலங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டாக கூறப்பட்டது.
தொடர்ந்து, அவை நடவடிக்கையின்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரங்களை எழுப்ப முயன்றனர். எனினும், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவை நடவடிக்கைகளை புறக்கணித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனால், அவை அடிக்கடி ஒத்தி வைக்கப்படும் சூழலும் ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
எனினும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்-மந்திரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக வேற்றுமை பார்க்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவித்த அவர்கள், அதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளனர்.
இதேபோன்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என முடிவு செய்திருக்கிறார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விட்டது என அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் டெல்லிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் டெல்லி செல்லவில்லை.
இதுபற்றி எந்தவொரு காரணமும் அவர் வெளியிடவில்லை என அக்கட்சி வட்டாரம் தெரிவித்து உள்ளது. ஒருவேளை அவர் டெல்லிக்கு நாளை புறப்பட்டு செல்வாரா? என கேட்கப்பட்டது. எனினும், அது இன்னும் தெரியவில்லை. நாளைக்கே அதுபற்றிய விவரம் தெரிய வரும் என்று அக்கட்சி வட்டாரம் தெரிவித்து உள்ளது. இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் ஒரு பகுதியாக திரிணாமுல் காங்கிரஸ் இருந்து வருகிறது.