விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்து விலைவாசியை கட்டுப்படுத்தக்கூடியதாக பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கலால் வரி குறைப்பு
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்தினம் அமெரிக்கா சென்றார். வாஷிங்டனில் உள்ள புருக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பிரபல பொருளாதார நிபுணர் ஈஸ்வர் பிரசாத்துடன் உரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பற்றிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
எரிபொருள், உரம், உணவு ஆகிய பொருட்கள் உலக அளவில் உயர்ந்து வருகின்றன. அதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அந்த சுமை, மக்களுக்கு ஏறாமல் பார்த்துக் கொள்கிறோம். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பின் மூலம் எரிபொருள் விலையின் சுமை, மக்களை தாக்காமல் பார்த்துக் கொண்டோம்.
பட்ஜெட்
பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் பற்றி இப்போதே எதுவும் கூற முடியாது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சிக்கு முதலிடம் அளிப்போம். பணவீக்கம் கவலை அளிக்கிறது. அதை குறைக்க வேண்டும். அதே சமயத்தில், பொருளாதார வளர்ச்சியை எப்படி தக்க வைப்பது என்ற கேள்வி இயற்கையாகவே எழும்.
எனவே, எனது பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதுடன், விலைவாசியை கட்டுப்படுத்தும்வகையில் கவனமாக உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ருபே கார்டுகள்
இந்த நிகழ்ச்சியில், ஒரு இந்திய மாணவர், ''அமெரிக்காவில் இந்தியாவின் யு.பி.ஐ. (பண பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம்) சேவை கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எப்போது இந்த சேவையை தொடங்குவீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
இதுதொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேசி வருகிறோம். யு.பி.ஐ. மட்டுமின்றி, இந்தியாவின் ருபே கார்டுகள், பீம் செயலி ஆகியவற்றையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டு வருகிறோம். சிங்கப்பூரும், ஐக்கிய அரபு அமீரகமும் ருபே கார்டை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டார்ட்அப்புடன் பேச தயார்
மற்றொரு கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இடம் பெயர்வதாக நானும் கேள்விப்பட்டேன்.
அவர்கள் அரசுடன் பேச தயாராக இருந்தால், அவர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களது கவலைகளை தீர்த்து, அவர்களை இந்தியாவிலேயே செயல்பட வைப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க மந்திரியுடன் சந்திப்பு
அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் எல்லனை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவு, உலக நிலவரம், ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
உலக பொருளாதாரம் பற்றியும் பேசினர். நவம்பர் 11-ந் தேதி நடக்க உள்ள அமெரிக்க-இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி உறவு கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு வருமாறு ஜேனட் எல்லனுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.