மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
புதுடெல்லி,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டியை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது. இதனிடையே, கடந்த ஜூன் 9ம் தேதி டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். மோடியை தொடர்ந்து, அவரது தலைமையில் மத்திய மந்திரிகள் மற்றும் மத்திய இணை மந்திரிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
நேற்று முன்தினம் (அதாவது 10ம் தேதி) புதிய மந்திரிசபை முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய மந்திரிகளின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. நிதி, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகிய 4 முக்கிய துறைகளை பா.ஜ.க. தன்னிடமே வைத்து கொண்டுள்ளது. உள்துறை மந்திரியாக அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை மந்திரியாக ராஜ்நாத் சிங்கும், நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை மந்திரியாக ஜெய்சங்கரும் மீண்டும் பொறுப்பேற்று கொண்டனர்.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றார். அலுவலகம் வந்த அவரை நிதித்துறை செயலாளர் டி.வி. சோமநாதன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இவருடன் நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரியும் உடனிருந்தார். நிதி மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், தனது ஏழாவது பட்ஜெட்டையும், ஆறாவது முழு பட்ஜெட்டையும் தொடர்ச்சியாக தாக்கல் செய்ய உள்ளார். 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 18வது மக்களவையில் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் மந்திரிசபையில் இடம் பெற்ற போது மத்திய மந்திரியாக அவரது அரசியல் பயணம் தொடங்கியது. 2014 மந்திரிசபையில், அவர் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணை மந்திரியாக தனிப்பொறுப்புடனும் பின்னர் 2017ல் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். பின்னர் 2019-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
மேலும் அவர் தொடர்ச்சியாக ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.