பிரவீன் நெட்டார் கொலை வழக்கு: புத்தூர், சுள்ளியாவில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக புத்தூர், சுள்ளியாவில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மங்களூரு: பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக புத்தூர், சுள்ளியாவில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பிரவீன் நெட்டார் கொலை
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் (வயது 32). பா.ஜனதா பிரமுகரான இவர் பெல்லாரே பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி இரவு 8 மணி அளவில் பிரவீன் தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பையும், பா.ஜனதா, இந்து அமைப்பினர் இடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
தங்கள் கட்சி பிரமுகரை காப்பாற்ற தவறிய பா.ஜனதா அரசை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பலர் ராஜினாமா செய்தனர். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
என்.ஐ.ஏ. விசாரணை
இந்த கொலை வழக்கு தொடர்பாக பெல்லாரே போலீசார் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரவீன் நெட்டார் கொலை வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைத்தது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணை முடிந்து தற்போது அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிலரிடம் விசாரித்து வந்தனர்.
32 இடங்களில் சோதனை
இந்த நிலையில் சில தகவல்களின் அடிப்படையில் கொலையில் நேரடியாக தொடர்புடையவர்கள் மற்றும் மறைமுகமாக தொடர்புடையவர்களின் வீடுகள், நிறுவனங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை புத்தூர், சுள்ளியா தாலுகாவில் 32 இடங்களில் நடந்தது.
இந்த சோதனையின்போது குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் எதுவும் சிக்கியதா என்பது தெரியவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனையை தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் துறை உறுதி செய்துள்ளது. ஆனால் சோதனை பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.