பேரறிவாளன் வழக்கு: சுப்ரீம்கோர்ட்டின் 29 பக்க தீர்ப்பு நகல் வெளியீடு
பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகல் சுப்ரீம்கோர்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது.
அதாவது, 161-வது சட்ட பிரிவில் முடிவெடுக்க கவர்னர் தாமதப்படுத்தினால், சுப்ரீம்கோர்ட்டே முடிவெடுக்க வழிவகுக்கிறது சட்டப்பிரிவு 142 ஆகும். இந்நிலையில் பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகல் சுப்ரீம்கோர்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இன்று காலை சுப்ரீம்கோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், தற்போது பேரறிவாளன் விடுதலை குறித்து எழுத்துப்பூர்வமான தீர்ப்பு வெளியாகி உள்ளது. சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வர ராவ் , பி.ஆர். கவாய், ஏ.எஸ். கோபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வின் தீர்ப்பின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பேரறிவாளன் உடைய நீண்ட நாள் சிறைவாசம், சிறை & பரோலில் நன்னடத்தை, அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய், அவர் பெற்ற கல்வித் தகுதிகள், கவர்னரின் இரண்டரை ஆண்டு தாமதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரமான 142ஐ பயன்படுத்தி விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை முடிவு மீது கவர்னர் முடிவெடுக்காமல் இருந்ததை ஏற்க முடியாது. மேலும் தற்போதைய நிலையில் இத்தனை ஆண்டுகள் பேரறிவாளன் சிறையில் இருந்ததை முழுமையான தண்டனை அனுபவித்ததாக கருதி தற்போது ஜாமீனில் உள்ள பேரறிவாளனை விடுவித்து உத்தரவிடுகிறோம்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story