கர்நாடகத்தில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.
பெங்களூரு:
கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.
2 ஆண்டுகளுக்கு பிறகு...
கர்நாடகத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் 2023-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெங்களூரு எம்.ஜி. ரோடு, பிரிகேட் ரோடு, இந்திராநகர், கோரமங்களாவில் உள்ள கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், பார் அன்டு ரெஸ்டாரண்டுகள் தயாராகி வந்தன. மேலும் புத்தாண்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பெங்களூரு போலீசாரும் செய்து வந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் அதிகம் கூடும் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெரு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
பெண்கள் பாதுகாப்பு அறை
கடந்த காலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்கள் நடந்ததால் இந்த ஆண்டும் அதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வந்தனர். குடிபோதையில் இருக்கும் பெண்கள் ஓய்வு எடுப்பதற்காக முதல்முறையாக எம்.ஜி.ரோட்டை சுற்றி 30 இடங்களில் பெண்கள் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் நேற்று காலையில் எம்.ஜி.ரோடு, சர்ச் தெருவில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் எம்.ஜி.ரோடு, சர்ச் தெரு, கோரமங்களா, இந்திராநகர், கமர்சியல் தெரு ஆகிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. மேற்கண்ட பகுதிகளில் வண்ண விளக்குளால் சாலைகள் ஜொலித்தன. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் குவிந்த வாலிபர்கள், இளம்பெண்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக குத்தாட்டம் போட்டனர். மேலும் மதுஅருந்தியும் மகிழ்ந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
கடற்கரையில் குவிந்தனர்
இரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 30 மேம்பாலங்கள் மூடப்பட்டு இருந்தன.
இதுபோல மைசூரு, பெலகாவி, சிக்கமகளூரு, மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. மங்களூரு, உடுப்பி, உத்தர கன்னடாவில் கடற்கரையில் குவிந்து மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடினர். மலைநாடு மாவட்டங்களில் ரெசார்ட்டுகளில் மக்கள் கொண்டாடினர்.