கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிகிச்சை பிரிவு திறப்பு
கோலார் தங்கவயலில் உள்ள அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.8 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிகிச்சை பிரிவை சுகாதார துறை மந்திரி சுதாகர் திறந்து வைத்தார்.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயலில் உள்ள அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.8 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிகிச்சை பிரிவை சுகாதார துறை மந்திரி சுதாகர் திறந்து வைத்தார்.
புதிய சிகிச்சை பிரிவு
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ரூ.8 கோடி செலவில் நவீன வசதிகள் கொண்ட சிகிச்சை பிரிவு கட்டப்பட்டுள்ளது. அதை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் திறந்து வைத்தார். விழாவுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் தலைமை தாங்கினார்.
போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி, நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, சுகாதாரத்துறை மாநில இயக்குனர் இந்துமதி, தாசில்தார் சுஜாதா, மாவட்ட சுகாதார அதிகாரி சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிதி ஒதுக்க முடியாமல் போனது
விழாவில் மந்திரி சுதாகர் 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார். பின்னர் அவர் கன்னடத்தில் பேசியதாவது:-
'இது எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் உள்ளனர். இருந்தாலும் நாம் அனைவரும் கன்னட மொழிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். நாம் எந்த மொழியை பேசுபவராக இருந்தாலும், நாம் வசிக்கும் மண்ணுக்கு விசுவாசமாக இருப்பது அவசியம். ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. தொடர்ந்து என்னை நவீன வசதிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அதன்பேரில் அவரது கோரிக்கையை நிறைவேற்ற சுகாதார துறை ஒப்புக்கொண்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக நிதி ஒதுக்க முடியாமல் போனது.
பொதுமக்கள் நலன் தான் முக்கியம்
அப்படியிருந்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் போராடி ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன். அரசியலை காட்டிலும் பொதுமக்கள் நலன்தான் முக்கியம். அரசுக்கு சொந்தமான நிலத்தில், 100 ஏக்கரில் மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சிக்கூடம் அல்லது மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை ஏற்படுத்தி கொடுக்கும்படி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் கோரிக்கை விடுத்தார். அதை கொண்டு வர நான் முயற்சிக்கிறேன்.
கோலாரில் ஒரு மருத்துவக்கல்லூரியும், கோலார் தங்கவயலில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இதய நோய் சிகிச்சை பிரிவு, விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளை அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நான் வலியுறுத்துவேன். இது உறுதி. ஒரு போதும், கோலார் தங்கவயல் மக்களை இந்த அரசு கைவிடாது.
மக்களுக்காக உழைக்க வேண்டும்
கொரோனா காலத்தில் நான் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து விட்டோம். அந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சக்தியை உருவாக்கும் டாக்டர்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கவேண்டியது அவசியம்.
தேர்தல் நேரத்தில் மட்டும் நீயா? நானா? என்று பா.ஜனதாவினரும், பிற கட்சியினரும் போட்டியிடுவோமே தவிர, மற்ற நேரங்களில் நாங்கள் அனைவரும் மக்களுக்காகவே சேவை செய்ய இருக்கிறோம். இதை மனதில் வைத்து அரசியல் தலைவர்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.