சந்தேஷ்காளி போராட்டத்தில் பங்கேற்க பணம் வாங்கிய 70 பெண்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய புதிய வீடியோ


சந்தேஷ்காளி போராட்டம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்த வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதிய வீடியோ நேற்று இரவு முதல் பரவி வருகிறது.
x

திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்த வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதிய வீடியோ நேற்று இரவு முதல் பரவி வருகிறது.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சந்தேஷ்காளி கிராமம். சுந்தரவனக் காடுகளின் எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டதாகவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

இந்த விவகாரம் மேற்கு வங்காள மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே பெரும் வார்த்தைப்போர் வெடித்தது. தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது.

இந்நிலையில், சந்தேஷ்காளி பெண்கள் தொடர்பான வீடியோக்களை கடந்த சில தினங்களாக திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்து வருகிறது. ஒரு வீடியோவில், சந்தேஷ்காளி மண்டல பா.ஜ.க. தலைவர் கங்காதர் கயல் பேசியது பதிவாகியிருந்தது. அதில், எதிர்க்கட்சி தலைவர் சுவெந்து அதிகாரியின் உத்தரவின்பேரில் போராட்டம் நடத்தப்பட்டதாக அவர் கூறுகிறார். மற்றொரு வீடியோவில், பா.ஜ.க.வினர் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு, அதை வைத்து போலியான பாலியல் புகார்களை பதிவு செய்திருப்பதாக பெண்கள் கூறுவதுபோன்று பதிவாகியிருந்தது.

இந்த வீடியோக்கள் வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சந்தேஷ்காளி விவகாரம் தொடர்பான மற்றொரு வீடியோ நேற்று இரவு முதல் பரவி வருகிறது. 45 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், எதிர்முனையில் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு கங்காதர் கயல் பதில் அளிப்பது பதிவாகியிருக்கிறது.

அதில், ஷேக் ஷாஜகானுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற 70 பெண்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டது என்று கயல் கூறுவதை கேட்க முடிகிறது

"போராட்டக்காரர்களில் 30 சதவீதம் பெண்கள். மொத்தம் உள்ள 50 பூத்களுக்கும் ரூ.2.5 லட்சம் பணம் தேவைப்படும். இங்குள்ள எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்களுக்கு தேவையான பணம் கொடுத்து அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும், பெண்களே முன் வரிசையில் போலீசாரை எதிர்கொள்வார்கள்" என கயல் கூறுகிறார்.

சந்தேஷ்காளி விவகாரத்தில் பா.ஜ.க.வின் ஜோடிக்கப்பட்ட கதைகளின் உண்மை வெளிவருகிறது என திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தா கூறி உள்ளார். ஆனால் இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என பா.ஜ.க. கூறுகிறது.


Next Story