டெல்லி பல்கலை கழகத்தில் புது வாய்ப்பு; மீண்டும் சட்டப்படிப்பை தொடர்ந்த 70 வயது முதியவர்
42 ஆண்டு கால கனவு நனவாகும் வகையில் முதியவர் ஒருவர் டெல்லி பல்கலை கழகத்தில் விடுபட்ட தனது படிப்பை தொடரும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி பல்கலை கழகத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பட்டப்படிப்பு முடிக்காத மாணவர்கள் அதனை நிறைவு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, படிப்பை கைவிட்டவர்கள், தொடர முடியாதவர்கள் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதனை பயன்படுத்தி கொண்டு ராஜேஷ் குமார் ராவத் (வயது 70) என்பவர் முதுநிலைக்கான சட்ட படிப்பில் படிக்க விண்ணப்பித்து உள்ளார். அவர் 42 ஆண்டுகளுக்கு முன் லக்னோவில் எல்.எல்.பி. எனப்படும் இளநிலை சட்டப்படிப்பு முடித்ததும், சி.பி.ஐ.யில் பணியில் சேர்ந்து உள்ளார். பின்னர், டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
டெல்லி பல்கலை கழகத்தில் 1979-ம் ஆண்டு முதுநிலைக்கான சட்ட படிப்பில் படிக்க விண்ணப்பித்து உள்ளார். சி.பி.ஐ. பணியில் இருந்த அவரால், அடிக்கடி வெளியூருக்கு செல்ல வேண்டி இருந்துள்ளது. அதனால், அவரால் படிப்பை தொடர முடியாமல் அதனை விட்டு விட்டார்.
இந்நிலையில், டெல்லி பல்கலை கழகம் வழங்கியுள்ள இந்த அரிய வாய்ப்பின்படி, 8,200 முன்னாள் மாணவர்கள் 2வது முறையாக படிப்பை நிறைவு செய்ய விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களில் ராஜேஷும் ஒருவர் ஆவார்.
இதுபற்றி அவர் கூறும்போது, தங்களுடைய படிப்பை நிறைவு செய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பெரிய சந்தர்ப்பம் இது. நீண்டகால ஆசை இதனால் பூர்த்தியடையும். இந்த வாய்ப்பினை வழங்கியதற்காக டெல்லி பல்கலை கழகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.
அவர் முதுநிலை சட்டப்படிப்பை கைவிட்ட போதிலும், பட்டப்படிப்பை நிறைவு செய்யும் ஆவலில் இருந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு பல்கலை கழகங்களிலும் தனது விடுபட்ட படிப்பை தொடர முயற்சித்து உள்ளார். ஆனால், அது நடக்கவில்லை. இறுதியில் டெல்லி பல்கலை கழகத்தின் இந்த சிறப்பு திட்ட அறிவிப்பு பற்றி அறிந்து அதற்கு விண்ணப்பித்து இருக்கிறார்.
எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் கல்வி பயின்று, வேலைக்கு சென்று விட்ட நிலையில், நான் எனது படிப்பை மீண்டும் தொடங்கியுள்ளேன் என கூறியுள்ளார். எனது குடும்பத்தினரும் என்னுடைய முடிவுக்கு ஆதரவாக உள்ளனர்.
வயது கல்விக்கு ஒரு தடையில்லை. ஓய்வு பெற்று விட்டேன் என்பதற்காக செய்வதற்கு எதுவுமில்லை என எண்ண கூடாது. மாணவராக இருப்பது நல்லதே. இது ஒரு புது அனுபவம். கல்வி கற்பது நிற்க கூடாது என்று முன்னாள் சி.பி.ஐ. பணியாளரான ராஜேஷ் கூறியுள்ளார்.
கல்விக்கு கரையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக 70 வயதிலும் கிடைத்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தனது கல்வி கற்கும் கனவை தொடரும் ஆவலுடன் அவரை போன்று பலரும் முன்வந்துள்ளது வரவேற்புக்குரியது.