கர்நாடகத்தில் புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தம்; உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி
கர்நாடகத்தில் புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் புதிதாக பி.பி.எல். (வறுமைக் கோட்டிற்கு உள்ளோர்), ஏ.பி.எல். ரேஷன் அட்டைகளை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளோம். ஏற்கனவே 3 லட்சம் பேர் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். தகுதியானவர்களுக்கு மட்டுமே பி.பி.எல். ரேஷன் அட்டை வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் உள்ளவர்கள், 1,000 சதுரஅடிக்கு மேல் சொந்த வீடு உள்ளவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர், சொந்தமாக 4 சக்கர வாகனங்களை வைத்திருப்போர், 3 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு பி.பி.எல். ரேஷன் அட்டை வழங்க மாட்டோம்.
ஏற்கனவே பி.பி.எல். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களின் குடும்ப நிலை குறித்து ஆய்வு நடத்த இருக்கிறோம். இதுவரை நடத்திய ஆய்வில் தகுதியற்றவர்களிடம் இருந்து 35 ஆயிரம் பி.பி.எல். ரேஷன் அட்டைகளை ரத்து செய்துள்ளோம். அந்த ரேஷன் அட்டைகளில் 4.55 லட்சம் இறந்தவர்களின் பெயர்களை நீக்கியுள்ளோம். இதனால் அரசுக்கு மாதம் ரூ.8 கோடி வரை மிச்சமாகிறது.
இவ்வாறு கே.எச்.முனியப்பா கூறினார்.