சந்திரயான்-3 லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு
நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி நாளை சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) கடந்த ஜூலை 14-ந்தேதி 'சந்திரயான்-3' விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தின் லேண்டர் கருவி, நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முன்னதாக 'சந்திரயான்-3' திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டர் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டு நிலவையொட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தது. தொடர்ந்து, லேண்டர் கலனின் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் கொண்டு வரப்பட்டுள்ளது.
லேண்டர் தரையிறங்கும் நிலவின் மேற்பரப்பின் தன்மையை அறிந்து அதற்கேற்ப தரையிறக்க உதவும் வகையில் லேண்டரில் எல்.எச்.டி.ஏ.சி. எனப்படும் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் கடந்த ஆகஸ்ட் 20-ந்தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.