தேஜஸ்வி சூர்யா எம்.பி.க்கு எதிராக டுவிட்டரில் இணையவாசிகள் ஆக்ரோஷம்
பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கியபோது, மசால் தோசை சாப்பிட்ட வீடியோவை வெளியிட்ட தேஜஸ்வி சூர்யா எம்.பி.க்கு எதிராக இணையவாசிகள் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பெங்களூரு: பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கியபோது, மசால் தோசை சாப்பிட்ட வீடியோவை வெளியிட்ட தேஜஸ்வி சூர்யா எம்.பி.க்கு எதிராக இணையவாசிகள் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தேஜஸ்வி சூர்யா எம்.பி.
பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வருபவர் தேஜஸ்வி சூர்யா. பா.ஜனதா தேசிய இளைஞர் அணி தலைவரான அவர் மத ரீதியாக பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி கொள்வதும் உண்டு. இந்த நிலையில் பெங்களூருவில் கடந்த 1-ந் தேதி முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தேஜஸ்வி சூர்யா எம்.பி. பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள ஒரு ஓட்டலில் மசால் தோசை சாப்பிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி, தேஜஸ்வி சூர்யா கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். இதை நடிகை ரம்யா டுவிட்டரில் விமர்சித்து கருத்து வெளியிட்டு இருந்தார்.
கடும் விமர்சனம்
இந்த நிலையில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேஜஸ்வி சூர்யாவின் வீடியோவை பார்த்து இணையவாசிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய சமூக வலைத்தள இணை ஒருங்கிணைப்பாளர் லாவண்யா பல்லால், அந்த வீடியோ கடந்த 5-ந் தேதி எடுக்கப்பட்டதாகவும், பெங்களூரு மக்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டு இருந்தபோது, தேஜஸ்வி சூர்யா தனது நண்பர்களுடன் அந்த உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி பிருத்ரிரெட்டி கூறுகையில், 'ரோம் நகரம் பற்றி எரிந்தபோது மன்னர் நீரோ 'பிடில்' வாசித்தது போல் தேஜஸ்வி சூர்யாவின் செயல் உள்ளது. மக்கள் ஓட்டு போடுவதற்கு முன்பு, தேஜஸ்வி சூர்யாவின் இந்த சிரித்த முகத்தை ஒரு முறை பார்த்து கொள்ளுங்கள்' என்று கூறினார். ஒருவர் தனது டுவிட்டரில், 'தேஜஸ்வி சூர்யா கெஜ்ரிவாலை விமர்சித்து 240 பதிவுகளும், ராகுல் காந்தி குறித்து 17 பதிவுகளும், இந்திரா காந்தி, நேரு குறித்து 55 பதிவுகளும், மோடியை பாராட்டி 137 பதிவுகளையும் பதிவிட்டுள்ளார். ஆனால் பெங்களூரு வெள்ளம் குறித்து ஒரு பதிவை கூட அவர் வெளியிடவில்லை' என்று கூறி தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மோசமான நிலைமை
மற்றொரு நபர் தனது டுவிட்டரில், 'எந்த காரணமும் இன்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு சென்று அந்த அரசுக்கு எதிராக போராடும் தேஜஸ்வி சூர்யா, தனது சொந்த மாநிலத்தில் மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்கும்போது, காணாமல் போய்விடுகிறார்' என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் எம்.பி.க்கள் சதானந்தகவுடா, பி.சி.மோகனுக்கு எதிராகவும் இணையவாசிகள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.