நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தியே: தேசிய தேர்வு முகமை விளக்கம்


நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தியே: தேசிய தேர்வு முகமை விளக்கம்
x

ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும், ராணுவ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் 'நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் என மொத்தம் சுமார் 24 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 216 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதில் 12 ஆயிரத்து 730 அரசு பள்ளி மாணவ-மாணவிகள்.நாடு முழுவதும் 557 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நேற்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) 'நீட்' தேர்வை நடத்தியது.இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் என்ற இடத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் மாணவர்கள் தேர்வு முடியும் முன்னரே வினாத்தாளுடன் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி அளவில் கேள்வித்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில்,‛‛ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை. தேர்வு முடிவதற்கு முன்பே வலுக்கட்டாயமாக வெளியேறிய மாணவர்கள் வினாத்தாளை இணையத்தில் பரப்பினர். மாலை 4 மணியளவில் தான் வினாத்தாள் பரப்பப்பட்டது. அதற்கு முன்பே தேர்வுகள் துவங்கிவிட்டன'' என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.


Next Story