விராஜ்பேட்டை அருகே தொடர் அட்டகாசம் செய்த காட்டுயானை பிடிபட்டது


விராஜ்பேட்டை அருகே தொடர் அட்டகாசம் செய்த காட்டுயானை பிடிபட்டது
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:45 PM GMT)

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானை பிடிபட்டது.

குடகு-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானை பிடிபட்டது.

தொடர் அட்டகாசம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வந்தது. குறிப்பாக விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்தி வந்தது. மேலும் காபி தோட்டத்திற்குள் அடிக்கடி புகுந்து அங்கு வேலை செய்யும் கூலி தொழிலாளிகளை அச்சுறுத்தி வந்தது. இதனால் கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் பொதுமக்கள் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி வனத்துறை அதிகாரிகள் காட்டுயானையை பிடிக்க முடிவு செய்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக விராஜ்பேட்டை பகுதியில் வந்து, அட்டகாசம் செய்து வந்த 35 வயது காட்டுயானை ஒன்றை வனத்துறை அதிகாரிகள் பிடிக்க திட்டமிட்டனர்.

கும்கிகள் வரவழைப்பு

இதற்காக கும்கிகளான அபிமன்யு, பிரசாந்த், ஹர்ஷா உள்பட 4 யானைகள் வரவழைக்கப்பட்டது. இந்த கும்கியானைகள் உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் அந்த காட்டுயானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று அந்த காட்டுயானை விராஜ்பேட்டை அருகே அம்மதியை அடுத்த கண்டங்கலா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றி வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கும்கி யானைகளுடன் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், அந்த காட்டுயானையை சுற்றி வளைத்தனர். கும்கியானைகளை பார்த்தவுடன் அந்த காட்டுயானை அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் அந்த காட்டுயானையை நோக்கி துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினர். அந்த மயக்க ஊசி காட்டு யானையின் உடலில் பட்டதும், அது மதம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. பின்னர் அதனால் ஓட முடியவில்லை. சிறிது தூரம் சென்றதும், மயங்கி விழுந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த காட்டுயானையின் கால்கள் மற்றும் உடல் பகுதியை கயிற்றால் கட்டி துபாரே யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

ரேடியோ காலர் பொருத்தம்

இதற்கிடையில் அந்த காட்டுயானைக்கு வனத்துறையினர் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. இதையடுத்து அந்த காட்டுயானையை பந்திப்பூர் வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் விட்டனர்.


Next Story