சித்ரதுர்கா அருகே வீட்டில் பதுக்கிய 81 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்


சித்ரதுர்கா அருகே  வீட்டில் பதுக்கிய 81 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 81 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிக்கமகளூரு-

சித்ரதுர்கா அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 81 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனவிலங்குகளை வேட்டையாட

சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு தாலுகா தேவசமுத்ரா கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட ஒரு வீட்டில் நாட்டுவெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக ராம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் குறிப்பிட்ட வீட்டில் விரைந்து சென்று அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சுமன் என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுமன், ஆந்்திராவை சேர்ந்த கங்கண்ணா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் ஆந்திராவில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை சித்ரதுர்காவுக்கு கடத்தி வந்ததும், அதனை பதுக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

இதையடுத்து அவர்களிடம் இருந்து 81 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை சிபரா கிராமத்திற்கு அருகே காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் செயலிழக்க செய்தனர். இதுகுறித்து ராம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுமன், கங்கண்ணா ஆகியோருக்கு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்தது யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story