பெங்களூரு அருகேதிருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 5 பேர் கைது
பெங்களூரு அருகே திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புடைய நகைகள், செல்போன்கள் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை போலீசார், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், செல்போன்கள் ஒசக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த நகைகளை, போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் பார்வையிட்டார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை ஒசக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். 5 பேரும் தனித்தனி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் ஒருவர் பஸ்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து பயணம் செய்து, பயணிகளிடம் இருக்கும் செல்போன்களை திருடுவதை தொழிலாக வைத்திருந்தார். மற்ற 4 பேரும் பூட்டிய வீடுகளில் நகை, பணத்தை திருடி வந்துள்ளனர்.
கைதான 5 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய 900 கிராம் தங்க நகைகள், பஸ் பயணிகளிடம் இருந்து திருடிய 150 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.
அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த ஒசக்கோட்டை போலீசாரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு மல்லிகார்ஜுன் கூறினார்.