தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் ராஜினாமா; மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
தேசிய பழங்குடியின ஆணையம்
நாட்டில் பழங்குடியினர் நலத்தைப் பாதுகாப்பதற்காக தேசிய பழங்குடியின ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி அந்தஸ்திலான இதன் தலைவர் பதவிக்கு ஒருவரை ஜனாதிபதி நியமிக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த ஆணையத்தின் தலைவராக 3 ஆண்டுகாலத்துக்கு ஹர்ஷ் சவுகான் என்பவர் நியமிக்கப்பட்டார். தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், ஹர்ஷ் சவுகான் ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா ஏற்பு
அவர் கடந்த மாதம் 26-ந் தேதி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதை 27-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றதாக தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தேசிய பழங்குடியின ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசின், வருடாந்திர பணித்திறன் மதிப்பீட்டை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆணையத்தில் நடைபெறும் விசாரணைகளை இதன் தலைவர்தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும். ஆனால் ஹர்ஷ் சவுகானுக்கு உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் 2 விசாரணைகளைத்தான் அவர் தனது தலைமையில் நடத்தினார் என தேசிய பழங்குடியின ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசுக்கு கடிதம்
புதிய வனப் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹர்ஷ் சவுகான் கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்த கருத்துகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்திருந்தது.
இந்நிலையில்தான் ஹர்ஷ் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவால் தற்போது தேசிய பழங்குடியின ஆணையம் ஆனந்த நாயக் என்ற ஒரே ஒரு உறுப்பினருடன் செயல்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
பழங்குடியினர் உரிமைகளை பறிக்கும் வனப் பாதுகாப்பு சட்டத்தை ஹர்ஷ் சவுகான் எதிர்த்ததால்தான் அவர் ராஜினாமா செய்யும் நிலைக்கு மத்திய அரசால் தள்ளப்பட்டுள்ளார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'புதிய வனப் பாதுகாப்பு சட்டம் பழங்குடியினரின் உரிமைகளைப் பாதிக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை ஹர்ஷ் சவுகான் தைரியமாக எதிர்த்தார். அதற்கான விலையை தற்போது அவர் கொடுத்திருக்கிறார். தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் நிலைக்கு அவர் மத்திய அரசால் தள்ளப்பட்டிருக்கிறார்' என்று கூறியுள்ளார்.