நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா கோர்ட்டில் சரண்
பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா கோர்ட்டில் இன்று சரணடைந்து உள்ளார்.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து. கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர் கடந்த 1988ம் ஆண்டு பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங் என்பவருடன் வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பிறகு குர்னாம் சிங்கை அவரது காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியதாகவும், இதில் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய வழக்கில் 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.ஆயிரம் அபராதத்துடன் சுப்ரீம் கோர்ட்டு சித்துவை விடுவித்தது.
இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணையில் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து, நவ்ஜோத் சிங் சித்துவின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சித்து சரணடைய ஓரிரு வாரங்கள் காலஅவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
சில மருத்துவ நிலைமைகளை காரணம் காட்டி தனது கட்சிக்காரருக்கு ஒரு வாரம் அவகாசம் கோரி சித்து தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சித்துவுக்கு ஒரு வார கால அவகாசம் பெற்று தர அவரது வழக்கறிஞர் தரப்பு தவறிய நிலையில், பாட்டியாலா மாவட்ட கோர்ட்டில் சித்து இன்று சரணடைந்து உள்ளார்.
அவரை மாலை 5 மணியளவில் பாட்டியாலாவில் உள்ள மாதா கவுசல்யா மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதன்பின்பு அவரை சிறைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாட்டியாலா மத்திய சிறையில் சித்து சிறை வைக்கப்படுகிறார்.
நீதிமன்ற காவலில் உள்ள சித்துவுக்கு வி.ஐ.பி. சிகிச்சை தேவையில்லை என்றாலும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அவரது ஆலோசகரான சுரீந்தர் தல்லா கூறியுள்ளார்.