உப்பள்ளியில் அடுத்த மாதம் 12-ந்தேதி தேசிய இளைஞர் மாநாடு; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
உப்பள்ளியில் அடுத்த மாதம்(ஜனவாி) 12-ந் தேதி நடக்கும் தேசிய இளைஞர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
உப்பள்ளி:
உப்பள்ளியில் நேற்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் தொடங்கி வைக்கிறார்
உப்பள்ளி-தார்வார் இரட்டை நகரத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந் தேதி 26-வது தேசிய இளைஞர் மாநாடு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த மாநாடு 12-ந் தேதி தொடங்கி, 15-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. சுவாமி விவேகானந்தரின் 160-வது பிறந்தநாளையொட்டி தேசிய இளைஞர் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி உப்பள்ளி வருகை தர உள்ளார். இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்திற்கு மீண்டும் வருகை தர இருப்பது உறுதியாகி உள்ளது.
4 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 7,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு வருபவர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கும் பணிகளும் நடந்து வருகிறது. கர்நாடகத்தில் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெற இருப்பது, சிறப்பு வாய்ந்ததாகும். இந்த மாநாட்டில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை தேர்தல் நடைபெற...
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் (நவம்பர்) பெங்களூருவுக்கு வருகை தந்திருந்தார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 2-வது முனையம் மற்றும் கெம்பேகவுடா சிலையை அவர் திறந்து வைத்திருந்தார். இந்த நிலையில், அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்திற்கு வருகை தருவது உறுதியாகி உள்ளது.
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மாதம் ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடகம் அழைத்து வருவதற்கு தலைவர்கள் ஏற்பாடுகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.