'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: அமலாக்கப்பிரிவில் சோனியா ஆஜர்
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில், அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.
புதுடெல்லி,
நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கிய 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்தது. அதைத்திருப்பி செலுத்தாத நிலையில், அந்த பத்திரிகை நிறுவனத்தை ('அசோசியேட்டட் ஜர்னல்ஸ்') காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.
இதனால் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகளை 'யங் இந்தியா' அபகரித்து விட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்து அது டெல்லி கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இதில் நடந்துள்ளதாக கூறப்படுகிற சட்ட விரோத பண பரிமாற்றம் பற்றி அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது. இதில் ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
75 வயதான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 2 முறை முதலில் சம்மன் அனுப்பியும் அவர் கொரோனா தொற்றால் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து அவர் நேற்று (21-ந்தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய சம்மன் வழங்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று மதியம் டெல்லி அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு விசாரணைக்காக சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருடனும், வந்தார்.
அவர் முக கவசம் அணிந்து காணப்பட்டார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது வேண்டுகோளுக்கு பின்னர் அங்கிருந்து செல்வதற்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அனுமதித்தனர்.
சோனியா காந்தி அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு வருவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும், கட்சியின் காரியக்கமிட்டி உறுப்பினர்களும் கட்சியின் தலைமை அலுவலகம் எதிரே கூடினார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்கள், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி போராட்டம் நடத்தினர்.
தி.மு.க., சிவசேனா, ராஸ்ட்ரிய ஜனதாதளம், இடது சாரி கட்சிகள் உள்பட 13 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சோனியா காந்தியிடம் விசாரணை முடிவடையாத நிலையில் மீண்டும் 25-ந்தேதி விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.