நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல்காந்தியிடம் 5-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் 54-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு ஆங்கில பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டடு ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது. அதற்கு ஈடாக அந்நிறுவனத்தின் பங்குகள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன.
இதில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லி கோர்ட்டில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவ்விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததா என்பதை அறிய விசாரணை நடத்தி வருகிறது. ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பியதன்பேரில், அவர் கடந்த 13-ந் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
14 மற்றும் 15-ந் தேதிகளிலும் அவரிடம் விசாரணை நடந்தது. 3 நாட்களிலும் மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மீண்டும் 17-ந் தேதி ஆஜராகுமாறு அவரிடம் அமலாக்கத்துறை கூறியிருந்தது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் தாயார் சோனியாகாந்தியை கவனிக்க வேண்டி இருப்பதால், கால அவகாசம் அளிக்குமாறு ராகுல்காந்தி கோரினார்.
அதை ஏற்று, அவரை 20-ந் தேதி (நேற்று) ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கூறியிருந்தது. அதன்படி, நேற்று காலை 11.05 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ராகுல்காந்தி வந்து சேர்ந்தார். 'இசட் பிளஸ்' பாதுகாப்பு புடைசூழ அவர் வந்தார். பிற்பகல் 3.15 மணிவரை விசாரணை நடந்த நிலையில் மதிய உணவுக்காக விசாரணை நிறுத்தப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து ராகுல்காந்தி புறப்பட்டு சென்றார்.
மதிய உணவை முடித்துக்கொண்டு, மாலை 4.45 மணிக்கு அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் விசாரணை முடிந்து மாலையில் வீடு திரும்பினார்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக 5-வது நாளாக இன்றும்(செவ்வாய்க்கிழமை) அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் வழங்கியநிலையில் தற்போது ராகுல்காந்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கேள்விகள்
நேற்றைய விசாரணையின்போது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இயங்கிய விதம், அதற்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த கடன், யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்ட விதம், பங்குகள் பரிமாற்றம் ஆகியவை குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. யங் இந்தியன் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடுகள் பற்றி இந்த விசாரணை நடந்தது.
அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்து விவரம், கடந்த 2011-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் யங் இந்தியன் நிறுவனம் ரூ.1 கோடி கடன் வாங்கிய விவகாரம் ஆகியவை பற்றியும் கேட்கப்பட்டது.
விசாரணையை முன்னிட்டு, அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.