நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு!
காங்கிரஸ் தரப்பில் நாளை நாடு முழுவதும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு முன்னதாக நிறுவப்பட்ட பத்திரிகை 'நேஷனல் ஹெரால்டு' ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது.
அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதன் பதிப்பு நிறுவனமான 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், அவரது மகன் ராகுல் காந்தியையும் இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை 'யங் இந்தியா' அபகரித்து விட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்து அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 8-ந் தேதியும், ராகுல் காந்தி 5-ந்தேதியும் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. ராகுல் காந்தி, வெளிநாட்டில் இருந்ததால் கடந்த 5-ந் தேதி ஆஜராக முடியாமல் வேறொரு தேதி கேட்டார். அவர் 13-ந் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை இயக்குனரகம் புதிய சம்மன் பிறப்பித்துள்ளது. சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக, நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.