பெங்களூருவில் வருகிற 27-ந் தேதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்


பெங்களூருவில் வருகிற 27-ந் தேதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வருகிற 27-ந் தேதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேசிய தலைவராக தேவேகவுடா மீண்டும் தேர்வாக வாய்ப்புள்ளது.

பெங்களூரு:

தேசிய செயற்குழு கூட்டம்

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவராக தேவேகவுடா இருந்து வருகிறார். இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஜே.பி.பவனில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், எம்.பி.க்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதுதவிர கேரளா, பீகார், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள். குறிப்பாக 12 மாநிலங்களை சேர்ந்த மாநில தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேவேகவுடா மீண்டும் தேர்வு

இந்த செயற்குழு கூட்டத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பது, கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது. அத்துடன் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதியில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற இருக்கும் பஞ்சரத யாத்திரை குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அதே நேரத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவராக தேவேகவுடா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story