புதிய தேசிய கல்விக்கொள்கை ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கும் - பிரதமர் மோடி


புதிய தேசிய கல்விக்கொள்கை ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கும் - பிரதமர் மோடி
x

புதிய தேசிய கல்விக்கொள்கை ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அகில இந்திய கல்வி மாநாடு

புதிய தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டதன் 3-வது ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி டெல்லியில் 2 நாள் அகில இந்திய கல்வி மாநாடு நடக்கிறது. பிரகதி மைதானத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் புதிய கல்விக்கொள்கையின் சிறப்புகளை விவரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மொழி அரசியல்

புதிய கல்விக்கொள்கை ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கும். மொழி பிரச்சினையை தங்கள் சுயநலனுக்காக அரசியலாக்க முயற்சிப்பவர்கள் இதன் மூலம் தங்கள் கடைகளை அடைப்பார்கள். தாய்மொழியில் கல்வி கற்பது இந்தியாவில் மாணவர்களுக்கு ஒரு புதிய நீதியை அறிமுகப்படுத்துகிறது. இது சமூக நீதிக்கான மிக முக்கியமான படியாகும். மாணவர்களின் திறனுக்கு பதிலாக அவர்களது மொழியின் அடிப்படையில் அவர்களை மதிப்பிடுவது மிகப்பெரிய அநீதி ஆகும்.

உலகில் ஏராளமான மொழிகளும், அவற்றுக்கு என சிறப்புகளும் உள்ளன. பல வளர்ந்த நாடுகள் தங்கள் உள்ளூர் மொழிகள் காரணமாக சிறப்பை பெற்றுள்ளன. ஐரோப்பாவை பொறுத்தவரை பல நாடுகள் தங்கள் உள்ளூர் மொழிகளை பயன்படுத்துகின்றன.

கிராமப்புற இளைஞர்கள் பாதிப்பு

இந்தியாவில் நிறுவப்பட்ட மொழிகள் ஏராளம் இருந்தாலும், அவை பின்தங்கிய நிலையின் அறிகுறியாக காட்டப்படுகின்றன. ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் புறக்கணிக்கப்படுவதுடன், அவர்களின் திறமை அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். புதிய தேசிய கல்விக்கொள்கையின் வருகையால் நாடு இப்போது இந்த நம்பிக்கையைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா.வில் கூட நான் இந்திய மொழியில்தான் பேசுகிறேன்.

ஒரு மொழியில் மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும்போது, அவர்களது திறமைகள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி வளரும். புதிய சாத்தியங்களின் தோட்டமாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. நமது ஐ.ஐடி.களின் வளாகங்களை தங்கள் நாடுகளில் திறக்க பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. அந்தவகையில் தான்சானியா, அபுதாபி நாடுகளில் ஐ.ஐ.டி. வளாகங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு உள்ளன. பல சர்வதேச பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை திறப்பதற்கு நம்மை நாடுகின்றன.

கண்டுபிடிப்புகளின் மையம்

புதிய கல்விக்கொள்கையானது இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பாரம்பரிய திறன் அமைப்புகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்திற்கும் சமமான முக்கியத்துவத்தை அளித்துள்ளது. பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்டங்களை பிரதமர் வெளியிட்டார். மேலும் பிரதமர் ஸ்ரீ திட்டத்தின் முதல் தவணை தொகையையும் அவர் விடுவித்தார்.


Next Story