பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் திறந்து வைக்கிறார்
பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையை அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையை அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் சாலை
கர்நாடக சட்டசபைக்கு மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தேசிய தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு அடிக்கடி வந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த மாதம்(ஜனவரி) 3 முறையும், இந்த மாதம்(பிப்ரவரி) ஏற்கனவே 2 முறையும், வருகிற 27-ந் தேதி சிவமொக்கா மற்றும் பெலகாவிக்கும் என பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்த மாதமும்(மார்ச்) பிரதமர் மோடி கர்நாடகம் வருகை தர உள்ளார். அதாவது பெங்களூரு-மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையை அவர் திறந்து வைக்க இருக்கிறார். இதுகுறித்து மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களிடம் கூறியதாவது:-
11-ந் தேதி பிரதமர் வருகை
பெங்களூரு-மைசூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை திறந்துவைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம்(மார்ச்) 11-ந் தேதி கர்நாடகம் வருகை தர உள்ளார். ராமநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து பிரதமர் இறங்க இருக்கிறார். பின்னர் ராமநகரில் இருந்து மண்டியா மாவட்டம் மத்தூர் வரை எக்ஸ்பிரஸ் சாலையில் பிரதமர் மோடி பயணம் செய்ய இருக்கிறார்.
மத்தூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று அவர் பேச இருக்கிறார். பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையின் காரணமாக பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு செல்லும் நேரம் குறைய உள்ளதால், பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.