கர்நாடகத்தை 'ஏ.டி.எம்.' ஆக பயன்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டம்; நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு


கர்நாடகத்தை ஏ.டி.எம். ஆக பயன்படுத்த   காங்கிரஸ் மேலிடம் திட்டம்; நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு
x

வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தை ‘ஏ.டி.எம்.' ஆக பயன்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக நளின்குமார் கட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு:

வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தை 'ஏ.டி.எம்.' ஆக பயன்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக நளின்குமார் கட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராகுல் காந்தி மறந்துவிட்டாரா?

காங்கிரசில் ஜி.23 தலைவர்கள் கோஷ்டியாக செயல்படுகிறார்கள். அவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சியை தொடங்கியுள்ளார். அதே போல் ஒவ்வொருவராக அக்கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். கட்சியில் எதிர்காலம் இல்லை என்றும், உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

குடும்ப அரசியல் காரணமாக காங்கிரஸ் வரும் நாட்களில் இன்னும் மிக மோசமான நிலையை சந்திக்கும். காங்கிரசை விட்டு விலகி செல்லும் தலைவர்களை ஒன்று சேர்த்து ராகுல் காந்தி காங்கிரஸ் ஜோடோ யாத்திரையை நடத்தி இருக்க வேண்டும். நேரு நாட்டை 2 ஆக பிளவுப்படுத்தினார். இதை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா?.

நிரந்தரமாக புறக்கணித்துவிட்டனர்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி ரத்து செய்து நாட்டை ஒற்றுமைப்படுத்தும் பணியை செய்தார். காங்கிரஸ் ஊழல் கட்சி. சாதிகள் இடையே மோதல், மத மோதல்களை ஏற்படுத்தும் கட்சி காங்கிரஸ். பா.ஜனதா மக்களின் நலன்களை காக்கிறது. 50 ஆண்டுகால காங்கிரசின் ஊழல்களால் வெறுப்படைந்து மக்கள் அக்கட்சியை நிரந்தரமாக புறக்கணித்துவிட்டனர்.

ராகுல் காந்தியின் யாத்திரை கர்நாடகத்திற்கு வரும்போது, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாக வரவேற்பு அளித்தனர். இதை பார்க்கும்போது காங்கிரசில் கோஷ்டி பூசல் அதிகமாக உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதை மக்கள் கவனித்துள்ளனர். அம்பேத்கருக்கு தொடர்ந்த அநீதி இழைத்தது காங்கிரஸ். அவரது பெயரை அக்கட்சி வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தி வந்துள்ளது.

போலி காந்தி குடும்பம்

கர்நாடகத்தில் அம்பேத்கர் வந்து சென்ற இடங்களை மேம்படுத்த பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மக்கள் தீர்மானித்துவிட்டனர். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று அதன் மூலம் கர்நாடகத்தை தனது 'ஏ.டி.எம்.' ஆக பயன்படுத்தி அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

அவர்களது இந்த எண்ணம் ஈடேறாது. சித்தராமையா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதனால் சித்தராமையாவுக்கு தூக்கம் போய்விட்டது.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.


Next Story