மராட்டியத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டம்


மராட்டியத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டம்
x

சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டு இருப்பதால் மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நாக்பூர்,

மராட்டியத்தில் சிவசேனா கூட்டணி அரசு நடத்தி வரும் நிலையில், கடந்த 20-ந் தேதி அம்மாநில அரசியல் பூகம்பம் ஏற்பட்டது. ஆளும் சிவசேனாவின் ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் இரவோடு இரவாக குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அங்கிருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இடம் மாறி சொகுசு ஓட்டலில் முகாமிட்டனர். (இந்த இரு மாநிலங்களும் பா.ஜனதா ஆளும் கட்சியாக உள்ளவை). மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை காப்பாற்ற பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்த்து கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிவசேனா கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 55. ஆனால் தற்போது அதிருப்தி அணி வசம் மட்டுமே 38 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வசம் வெறும் 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர்.

சட்டசபையில் தற்போதைய பலம் 287 (உயிரிழந்த ஒரு எம்.எல்.ஏ.வை தவிர்த்து) ஆக உள்ளது. இதனால் 106 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக திகழும் பா.ஜனதா சிவசேனா அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. இதனால், அம்மாநில அரசியலில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், சிவசேனா தொண்டர்கள் கடந்த சில நாட்களாக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டு இருப்பதால் மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் மும்பையில் அசாம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இதேபோல மும்பையை அடுத்த தானேயிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேக்கர் உத்தரவிட்டுள்ளார். வருகிற 30-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு இடங்களில் இன்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story