டெல்லி மக்களுக்கு நாகாலாந்து எங்கு இருக்கிறது என தெரியவில்லை - வைரலான மந்திரியின் பேச்சு
நாகாலாந்து மக்கள்தொகையை விட டெல்லி ரயில் நிலையத்தில் மக்கள் எண்ணிக்கை அதிகம் என மந்திரி பேசியுள்ளார்.
கோஹிமா,
வடகிழக்கு இந்தியர்களின் கண்கள் குறித்து பேசி சமீபத்தில் இணையத்தில் பிரபலமானார் நாகாலாந்து மந்திரி டெம்ஜென் இம்னா அலோங். 'எங்கள் கண்கள் சிறிதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கும்' என டெம்ஜென் இம்னா தெரிவித்து இருந்தார்.
அதை தொடர்ந்து சமீபத்தில் உலக மக்கள் தொகை தினத்தன்று இவர் "மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சிங்கிளாக இருங்கள்" என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இவர் மீண்டும் தனது பேச்சால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் டெல்லி குறித்து டெம்ஜென் இம்னா பேசியதாவது :
1999 ஆம் ஆண்டு நான் முதன்முதலில் டெல்லிக்கு வந்து பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இறங்கியபோது, அங்குள்ள மக்களின் எண்ணிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மொத்த நாகாலாந்தின் மக்கள்தொகையை விட அந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
டெல்லியில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு நாகாலாந்து எங்குள்ளது என்று தெரியவில்லை. அவர்கள் என்னிடம் நாகாலாந்துக்கு செல்ல விசா வேண்டுமா?' என்று கேட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.