எனது மகனை திட்டமிட்ட முறையில் கொலை செய்துள்ளனர்: பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை வேதனை
எனது மகனை திட்டமிட்ட முறையில் கொலை செய்துள்ளனர் என பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்காவர் சிங் இன்று கூறியுள்ளார்.
லூதியானா,
பஞ்சாபி பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான சித்து மூஸ்வாலா, கடந்த மே 29-ந்தேதி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல், கொடூர முறையில் அவரை சுட்டு கொன்றது.
இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். சித்து மூஸ்வாலா கொலை செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்த காவல் துறை பாதுகாப்பு நீக்கி கொள்ளப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தீபக், கபில் பண்டிட் மற்றும் ராஜீந்தர் ஆகிய 3 பேர் மேற்கு வங்காளம்-நேபாளம் எல்லையில் உளவுத்துறை நடவடிக்கையின் பேரில் ஏ.ஜி.டி.எப். குழுவினரால் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்காவர் சிங் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். அவர் பேசும்போது, எனது மகனை திட்டமிட்ட முறையில் கொலை செய்துள்ளனர்.
போலீசார் இதனை கும்பல்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் போல் காட்ட முயற்சிக்கின்றனர். என்னுடைய பிரச்சனைகளை பற்றி கேட்க வேண்டும் என டி.ஜி.பி.யிடம் நேரம் கேட்டிருக்கிறேன். ஒரு மாதம் வரை நான் காத்திருப்பேன்.
அப்படியும் வழக்கு விசாரணையில் ஒன்றும் நடக்கவில்லை எனில், எனது எப்.ஐ.ஆர். பதிவை திரும்ப பெறுவேன். பின்னர், இந்த நாட்டை விட்டே சென்று விடுவேன் என வருத்தமுடன் அவர் கூறியுள்ளார்.
தீபக் டினு சமீபத்தில், போலீசாரின் காவலில் இருந்து வேறொரு வழக்கு விசாரணைக்காக சென்றபோது தப்பியோடிய நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டார்.
வழக்கில் தொடர்புடைய பஞ்சாபி பாடகர் ஜக்தர் சிங் மூசா என்பவரையும் போலீசார் கடந்த 18-ந்தேதி கைது செய்தனர். குற்றவாளிகளில் ஒருவராக கூறப்படும் தீபக் டினுவின் காதலியான ஜதீந்தர் கவுர் என்பவரை மும்பை விமான நிலையத்தில் வைத்து, அதே தினத்தில் குண்டர் ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் விமானம் வழியே தப்பி வேறிடத்திற்கு செல்ல முயன்ற நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று இந்த வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.