எனது வாழ்க்கை வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையானது - அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
புதுடெல்லி,
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த மாதம் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இதையடுத்து, இன்று ஆஜராக வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த முறை 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலம் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அளித்துள்ளார். அதில், "புதிய சம்மன் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்ட விரோதமானது. எனது வாழ்க்கை வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையாக இருக்கிறது. மறைக்க எதுவும் இல்லை. எந்த ஒரு சம்மனையும் சட்டபூர்வமாக சந்திக்க தயாராக உள்ளேன்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.