இந்தியாவில் முஸ்லிம் சமூகத்துக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வேதனை!


இந்தியாவில் முஸ்லிம் சமூகத்துக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வேதனை!
x

“இந்திய முஸ்லிம்களின் முன் இருக்கும் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

நாக்பூர்,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் விதர்பா முஸ்லிம் அறிவுசார் மன்றம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்.

"இந்திய முஸ்லிம்களின் முன் இருக்கும் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. அப்போது பேசிய சரத் பவார் கூறுகையில்:-

முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருந்தாலும், அவர்களிடம் தங்களுக்கான 'உரிய பலன் கிடைக்கவில்லை' என்ற எண்ணம் உள்ளது.

இது உண்மை தான்.முஸ்லிம் சமூகத்தினருக்கு உரிய பங்கு கிடைப்பதற்கான வழிவகை குறித்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

அரசு தேர்வுகளில் உருது மொழி பயன்பாடு வேண்டும்.நாட்டின் அனைத்து துறைகளிலும் சிறுபான்மையினரும் உருது மொழியும் பங்காற்றியுள்ளன. உருது பள்ளிகள் மற்றும் கல்வியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உருதுவுடன், ஒரு மாநிலத்தின் முக்கிய பயன்பாட்டு மொழியைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கேரளாவில் சிறுபான்மையினர் அதிக அளவில் உள்ளனர். அதேவேளையில், அந்த மாநிலத்தில் சிறுபான்மையினர் எவ்வாறு அந்த மாநிலத்தின் முக்கிய மொழிக்கு ஆதரவளிக்கிறார்கள், இதனால் அவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.

வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இது குறித்த சிறுபான்மையினரின் புகார்கள் உண்மையானவை மற்றும் அவை கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

கலை, கவிதை மற்றும் எழுத்துத் துறைகளில் முஸ்லிம் சமூகம் பெரிய பங்களிப்பை வழங்க முடியும். முஸ்லீம் உறுப்பினர்களுக்கு சிறந்த தரமும் திறனும் உள்ளது. அதே வேளையில், அவர்களுக்கு போதிய ஆதரவும் சம வாய்ப்புகளும் தேவை.பாலிவுட்டை மேலே கொண்டு செல்லும் வேலையை முஸ்லிம்கள் செய்துள்ளனர்.

சிறுபான்மையினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்க தேசியவாத காங்கிரஸ் எப்போதும் பாடுபடுகிறது.எங்கள் கட்சியில் மொத்தமுள்ள 8 நாடாளுமன்ற உறுப்பினர்களில், இருவர் முஸ்லிம்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story