ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் போலீஸ், மகள், தாய் படுகொலையில் 15 மணி நேரத்தில் கொலையாளி கைது


ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் போலீஸ், மகள், தாய் படுகொலையில் 15 மணி நேரத்தில் கொலையாளி கைது
x

ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் போலீஸ், அவரது மகள், தாயை படுகொலை செய்த கொலையாளியை 15 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் போலீஸ் டிரைவர் என தெரியவந்திருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜம்ஷெட்பூர்,

மூவர் படுகொலை

ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் கோல்முரி போலீஸ் நிலையத்துக்கு அருகில் போலீசாருக்கான குடியிருப்பு உள்ளது. அங்கு வசித்த பெண் போலீஸ் சபிதா ராணி ஹெம்ப்ராம் (வயது 36), அவரது மகள் கீதா (13), 60 வயது தாய் ஆகியோரின் உடல்கள் அழுகிய உடல்கள் அங்கிருந்து கடந்த வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டன.

இதுதொடர்பாக உதவி சூப்பிரண்டு சுதன்சு ஜெயின் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் டிரைவர் கைது

அதில், அதே பகுதியில் உள்ள போலீஸ் மூத்த சூப்பிரண்டு அலுவலகத்தில் டிரைவராக பணிபுரியும் ராமச்சந்திர சிங் ஜமுதா பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பெண் போலீஸ், அவரது மகள், தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு மூத்த சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்தபோது பெண் போலீஸ் சபிதா ராணிக்கும், டிரைவர் ராமச்சந்திர சிங்குக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திர சிங் அடிக்கடி சபிதா ராணியின் குடியிருப்புக்கு வந்து சென்றுள்ளார்.

சந்தேகத்தில் விபரீதம்

ஆனால் சமீப சில மாதங்களாக, சபிதா ராணிக்கும், வேறு ஒரு ஆணுக்கும் தொடர்பு உருவாகியுள்ளதாக ராமச்சந்திர சிங்குக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அது தொடர்பான வாக்குவாதத்தில் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது. அதில் ஆத்திரம் தலைக்கேறிய ராமச்சந்திர சிங், ஒரு 'லிவர் கியரால்' சபிதா ராணியை தாக்கிக் கொன்றுள்ளார். தன்னைப் பற்றி சொல்லிவிடுவார்கள் என்ற அச்சத்தில் பெண் போலீசின் மகள், தாயையும் அதேபோல தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் வழக்கம்போல் பணிக்கு திரும்பியுள்ளார். அப்போதுதான் அவரை போலீசார் மடக்கியுள்ளனர்.

15 மணி நேரத்தில்...

சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த தனிப்படையினர், தடய அறிவியல் பிரிவினரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.


Next Story